இலக்கியம்


            தமிழ் இலக்கியங்களில் தமிழரின் வாழ்வியல், காதல், வீரம், அறம் என்று அத்தனை விசயங்களும் கொட்டிக்கிடக்கின்றன.

           “தமிழ் இலக்கியங்களில் மூழ்கிக் கிடக்கும் வேளைகளில் பசி கூட எடுக்காது, தூக்கம் வராது , காதலில் விழுந்தவன் போல ஒரு மயக்கம் இருக்கும் " இதெல்லாம் ஊரித்திளைத்தவர்கள் சொன்ன வாக்குமூலம்.

            இன்றைய காலகட்டத்துல நம்மில் எத்தனை பேருக்கு இலக்கிய நூல்களை , தேடி பிடிப்பதற்கோ , அத வாங்கி படிப்பதற்கோ நேரம் இருக்கிறது. இல்லை , அதைப்பற்றி நினைக்க கூட நேரம் இல்லை என்பது தான் உண்மை.

              இன்றைய இளைய தலைமுறையிடம் வலைப்பதிவுகளை , தமிழ்
வலைப்பதிவுகளை தேடிப் படிக்கும் ஒரு நல்ல பழக்கம் மெல்ல ,மெல்ல அதிகரித்துக்கொண்டே வருகிறது. இது நாம் ஒவ்வொருவரும் பெருமை கொள்ளவேண்டிய விசயம.

             ஒருவேளை வலைதளத்தில் சங்க இலக்கியத்தை பதிவாக்கினால் , நிறைய நண்பர்களுக்கு இலக்கியச்சுவையை அனுபவிக்கும் வாய்ப்பாக அமையும் , என்ற எண்ணத்தில் தான் சங்க இலக்கியப் பாடல்களை எளிய விளக்கத்தோடு பதிவாக்கும் முயற்சியில் முதல் படி வைக்கிறேன்.

             தாங்கள் ரசித்து மகிழ்ந்த இலக்கியப்படல்களை பதிவேற்ற , பகிர்ந்துகொள்ள admin@maalaineram.com


             உலகத்தில எல்லோருக்கும் பிடித்த உணர்வு "காதல்" .காதலை மிகச் சிறப்பாக சொன்னது ,அகநானூறு அதனால் என் பயணத்தை ஆரம்பிக்கிறேன்


            அகநானூறைப் பற்றி முன்னுரை எழுதவே ஐந்து பக்கங்கள் தேவைப்படும். அதனால , நேராக பாடலையும் , விளக்கத்தையும் பதிவு செய்கிறேன்



( தலைவியை பார்க்க இரவு நேரத்துல தலைவன் வரும்போது இருக்கும் ஆபத்துகளை உணர்ந்த தோழி , தலைவியைச் சந்திக்க பகலிலேயே வரலாம் என்கிறாள் )

பாடல்
        பகல் வரினும் வருக!


நீர்நிறம் கரப்ப , ஊழுறுபு உதிர்ந்து ,
பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்று,
கராஅம் துஞ்சும் கல்உயர் மறிசுழி,
உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்---

கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து
நாம அருந்துறைப் பேர்தந்து, யாமத்து
ஈங்கும் வருபவோ ? – ஒங்கல் வெற்ப! –
ஒருநாள் விழுமம் உறினும், வழிநாள்,
வாழ்குவள் அல்லள், என் தோழி ; யாவதும்

ஊருஇல் வழிகளும் பயில வழங்குநர்
நீடுஇன்று ஆக இழுக்குவர் , அதனால்,
உலமரல் வருத்தம் உறுதும், எம் படப்பைக்
கொடுந்தேன் இழைத்த கோடுஉயர் நெடுவரை,
பழம்தூங்கு நளிப்பிற் காந்தள்அம் பொதும்பில்

பகல்நீ வரினும் புணர்குவை அகல்மலை
வாங்குஅமைக் கண்இடை கடுப்ப, யாய்
ஓம்பினள் எடுத்த, தடமென் தோளே.



உயர்ந்த மலையினை உடைய தலைவனே. ! தண்ணீர் இருப்பதே தெரியாத அளவிற்கு ,மரத்திலிருந்து உதிர்ந்த பூக்கள் மறைத்திருக்கும் காட்டாற்றிலே முதலைகள் நிறைய இருக்கும். பெரிய பெரிய கற்களில் மோதி திரும்புகின்ற சுழிகளும் பல இருக்கும்.

தன் இனத்தோடு சேராமல் திரியும் களிற்று யானை மீதே மோதி அதன் மதத்தை அடக்கும் வலிமை உடைய அச்சம் தரும் வெள்ளம் அந்த ஆற்றிலே செல்லும்.

அவளவு வெள்ளம் போகும் ஆற்றினையும் ,எதற்கும் அஞ்சாத காட்டுப் பன்றியை போல நீ கடந்து வருகிறாய்.அச்சம் விளைவிக்கின்ற அறிய துறையினையும் கடந்து , நள்ளிரவின் நடுயாமத்திலே இவ்விடத்திற்கு வருபவர் யாரேனும் உள்ளார்களா ? ஒரு நாள் இரவு நீ துன்பம் உற்றாலும் அடுத்த நாள் உயிர் வாழ்பவள் இல்லை என் தோழி . எந்த இடையூறும் இல்லாத வழியானலும் அங்கு பகலில் சாதரணமாக சென்றுவருபவர் கூட இரவில் தவறுதல் செய்வார்களே. அதனால் உன் இரவு வருகை குறித்து நாங்கள் பெரும் மனக்கவலை அடைந்துள்ளோம்.

அகன்ற மலையிலுள்ள வளைந்த மூங்கிலின் கணுக்களுக்கிடையே உள்ள இடத்தைப் போல , என் தாய் போற்றி வளர்த்தவை அகன்ற மென்மையான என் தலைவியின் தோள்கள். எங்கள் தோட்டத்தினை அடுத்துள்ள ,நீண்ட மலையில், பழங்கள் தொங்குகின்ற மரச் செறிவினுள்
, காந்தள் செறிந்த அழகிய இடத்தே , பகலில் நீ வந்தாயனாலும் அவள் தோள்களைக் கட்டித் தழுவலாம்.

(அதனால் தலைவியை பார்க்க பகலிலேயே வருக)

இந்த பாடலில் ரசித்த மூன்று விடயங்கள்
  1. காதலியை பார்ப்பதற்காக , பசங்க எந்த மாதிரியான அபாயத்தையும் சந்திக்க தயாரா இருப்பாங்க
  2. அன்றும் சரி இன்றும் சரி , காதலிக்க ஆரம்பித்ததும் பொண்ணுங்களுக்கு தைரியம் அதிகமாயிடும்
  3. பையனுக்கு ஒரு துன்பம் என்றால் , அது நடக்க ஒருக்காலும் அவங்க
    காரணமா இருக்க கூடதுன்றதுல உறுதியா இருப்பாங்க
  4. நான் இவன காதலிக்குறேன் அப்டின்னு எல்லார்கிட்டயும் சொல்ல அவங்க எப்பயும் தயாரா இருப்பாங்க
  5. பசங்களுக்கு ரொம்ப சந்தோஷமான விசயம் , காதலியின் தோள்களை
    தழுவதுதான்.

அவளவு தான்

                                                                                                         
                                                     தொடர்வோம்